பல உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதை.
"சங்கவி எங்கே " என்று பதற்றத்துடன் கேட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளே வந்தார் சுரேஷ். அவர் மனைவி பாரிஜாதம் "மொதல்ல உள்ள வாங்க , அப்பறமா சங்கவிய தேடலாம்" என்றாள். குளித்துவிட்டு வந்த சுரேஷ், "இன்னுமா அவ வீடு திரும்பல " என்று கேட்டார். பாரிஜாதம் பதில் சொல்வதற்குள் "எப்போ வெளில போனா " என்றார். சற்றும் இடைவிடாமல் "ஏதாவது சாப்பிட்டு போனாளா? எப்போ சாப்பிட்டா ?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனார். தினமும் இந்த கூற்று நடப்பதால், பொறுமையை வளர்த்து கொண்டுவிட்டாள் பாரிஜாதம். "தினமும் போற மாதிரி தான் இன்னிக்கும் நல்லா பால் குடுச்சிட்டு தான் போனா " என்றாள் .
சுரேஷிற்கு ஆனாலும் மனதில் ஓர் பதற்றம் நிலவிக் கொண்டிருந்தது. அது எப்படித் தான் வயசுக்கு வந்த பொண்ண வீட்டுல வெச்சிண்டு இவளால் இவ்வளவு நிம்மதியாக இருக்க முடிகிறதோ என்று வியன்றார். சங்கவி வயசுக்கு வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது, ஆனால் அவளிடம் என்ன மாற்றங்கள். தங்கள் பேச்சைக் கேட்பதில்லை. நினைத்த பொழுது வெளியில் சென்று விடுகிறாள். தாமதமாக வீடு திரும்புகிறாள்.
இது ஒரு பக்கம் என்றால், அவர்கள் வீட்டை சுற்றியும் எத்தனை புது முகங்கள். அத்தனையும் ஆண்கள். விடலை பையன்கள் முதல் முதிர்ந்தவர்கள் வரை, பல புது முகங்கள் வந்து செல்வதை சுரேஷ் அறிவார். வீட்டைச் சுற்றி வருவது மட்டுமில்லாமல், அவர்கள் பல விதமான சங்கேத குரல்களையும் எழுப்பவதை அவர் உணர்ந்தார் . அது எப்படித் தான் இந்த ஆண் வர்கம் , ஒரு பெண் வயதுக்கு வந்ததை மோப்பம் பிடிக்கிறார்களோ என்று வியந்தார். வீட்டில் வயதுக்கு வந்த பெண் இருந்தால் மடியில் நெருப்பு கட்டிண்ட மாதிரி இருக்கும் என்று பெரியோர்கள் சொன்னது எப்பேர் பட்ட உண்மை என்பதை அனுபவிக்கிறோம் என்று நினைத்தார் .
"இல்ல பாரிஜாதம், சங்கவிக்கு வயசு பத்தாது. இந்த பசங்க யாராச்சும் அவளை மயக்கிடுவானோன்னு பயமா இருக்கு. அப்பொறம், வாயும் வயருமா வந்தா, அவளை நாம தானே காப்பாத்தி ஆகணும். " என்று புலம்பினார் சுரேஷ். "அதெல்லாம் ஒண்ணும் நடக்காது, நீங்க ஏன் கெட்டதாவே நினைக்கறீங்க ." என்றாள் பாரிஜாதம். ஆனால் அவள் வாயால் சொன்னதை அவள் மனது ஏற்கவில்லை என்பதை அவள் முகம் காட்டிவிட்டது. அதை சுரேஷும் கவனித்து விட்டார்.
"பாத்தியா உனக்கும் கவலையா தானே.... அதோ சங்கவி வந்துட்டா" என்று உற்சாகமடைந்தார் சுரேஷ். அடுப்பில் இருந்த உப்புமாவை கிளறிக்கொண்டே, மனதில் ஒரு நிம்மதியுடன், "நல்ல வேளை, இனிமே கொஞ்சம் நேரம் என்ன freeஆ விடுவீங்க. அவளையும் பாருங்க, correct ஆ நீங்க வந்ததை தெரிஞ்சு தான் திரும்பி வந்திருக்கா ." என்றாள் பாரிஜாதம். அதையும் ஒரு பெருமையாக எதுத்துக் கொண்ட சுரேஷ், "வாடி சங்கவி. எங்க போயிட்டு வர? பாரிஜாதம், அவளுக்கு ஏதாவது சாப்பிட குடேன்." என்று கொஞ்சும் குரலில் கேட்டார்.
சங்கவி அவரை பொறுமையாக கவனித்தாள் . பின்பு கண்டு கொள்ளாமல் அவரை தாண்டிச் சென்றாள் . "வாடி இங்க " என்றவாரே நாற்காலியில் இருந்து எழுந்தார் சுரேஷ். சங்கவி அப்பொழுதும் கண்டுக்கொள்ளாமல் பாரிஜாதத்தை பார்த்தாள் . கையில் பால் கிண்ணத்துடன் வரும் பாரிஜாதத்தின் அருகில் சென்று, அவள் காலை உரசிக் கொண்டு "மியாவ் " என்றாள் சங்கவி.
2 comments:
அட ரொம்ப சூப்பர் ஓய். அசோகமித்ரன் விட்ச்டுச்சென்ற இடத்தை பிடிக்க ஜுரூரா வேலை நடக்குது போல.
Cats named in your house are named Aishwarya 1, 2, and so on.. right? you did artistic liberty to use Sangavi for the Tamil Audience? You could have named Kundavai..
Post a Comment